உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகும்பேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா கோலாகலம்

ஆதிகும்பேஸ்வர சுவாமி கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஆதிகும்பேசுவர சுவாமி கோவிலில் திருக்கல்யாணத் திருவிழா கோலாகலமாக நடந்தது. சோழவளநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வரிசையில் 26வது திருத்தலமாக திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவராலும் பாடப்பெற்ற தலமாக கும்பகோணம் ஆதிகும்பேசுவரசுவாமி திருக்கோவில் திகழ்கிறது. காசி, திருவண்ணாமலை, திருத்தில்லை முதலான சிவத்தல வரிசையில் 11வது திருத்தலமாக திகழ்கின்றது. ஆன்மாக்கள் உய்வு பெற சிவபெருமான் நான்முகன் படைப்பிற்குக் காரணமாகிய ஜீவ வித்துக்களை அமுத கும்பத்துள் வைத்துத் தந்து அதனையே சிவலிங்க மூர்த்தமாக அமைத்து தம்மை தாமே வழிபட்ட தலம் என்ற சிறப்புடையது. 72ஆயிரம் கோடி மந்திர துதிகளுக்கு அதிபதியாகி அதை 51 பாகங்களாக்கி தன்னுருவில் தாங்கி நின்று அருளாட்சி செய்யும் ஆதியானவர் இங்கு மந்திர பீடேசுவரியாய் சர்வ மங்களத்தை அளிக்கும் மங்களாம்பிகையாக எழுந்தருளி அருள்பாலித்து வரும் தலம் ஆகும். இத்தகைய சிறப்புடைய இக்கோவிலில் திருக்கல்யாணத்திருவிழா மே 30ம்தேதி இரவு 7மணிக்கு தொடங்கியது. இதை முன்னிட்டு அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அளித்தார். 8 மணிக்கு சிவபெருமான் காட்சியளித்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து 9 மணிக்கு நிச்சயதாம்பூலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு மேல் 12மணிக்குள் ஆதிகும்பேசுவரருக்கும், மங்களாம்பிக்கைக்கும் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு 7மணிக்கு வெளிப்பிரகார உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று(1ம்தேதி) இரவு திருமண மறைச்சடங்கு நலுங்கு, ஊஞ்சல், இரவு பெரிய பிரகாரத்தில் உலாப்போந்து காட்சியளித்தல் நடந்தது. இன்று(2ம்தேதி) நாளை 3ம்தேதி இதே நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வரும் 4ம்தேதி திருக்கோவிலிலிருந்து சுவாமி அம்பாளுடன் புறப்பட்டு பகல் 12மணிக்கு மேல் 1.30மணிக்கு சங்கரமடத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு திருக்கோவிலுக்கு திரும்ப எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 5ம்தேதி மகாசுத்தாபிஷேகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி கமிஷனர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !