திருக்கோவிலூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை அனுமதி!
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் பழமை வாய்ந்த முருகர் கோவில் திருப்பணி நிறைவு செய்து கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கி இருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், ஆஸ்பிடல் ரோட்டில் மிகவும் பழமையான முருகர் கோவில் உள்ளது. இதனை ஒரு சமுதாயத்தினர் பராமரித்து வந்தனர். இந்நிலையில் திருப்பணி துவக்கப்பட்டு பெரும்பான்மையான பணிகள் நிறைவடைந்த நிலையில், சமூகத்தினருக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருப்பணி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்துக்கு சென்ற நிலையில், கோவிலை இந்து சமய அறநிலைத்துறை எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து கோவிலின் செயல்பாடுகள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் திருப்பணியை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் செய்வதற்கான அனுமதி கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் ஊர் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் திருப்பணியை நிறைவு செய்து, கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலைத்துறை அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ், கோவில் கும்பாபிஷேகம் செய்வதற்காக உத்தரவை இந்து சமய அறநிலையத் துறையிடம் இருந்து பெறுவதற்கு பெரும் முயற்சி மேற்கொண்டார். இதன் விளைவாக அறநிலையத்துறையின் அனுமதி தற்போது கிடைத்துள்ளது. இதனையடுத்து திருப்பணியை நிறைவு செய்து, விரைவில் கும்பாபிஷேகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் மற்றும் திருப்பணி மேற்கொண்டிருக்கும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.