மதுரை மீனாட்சி கோவிலில் ஆதீனங்களுக்கு மரியாதை!
மதுரை: மதுரை ஆதீன மடத்தில் நடந்த குருபூஜை விழாவிற்காக, மீனாட்சி அம்மன் கோவில் சார்பில், ஆதீனங்களுக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டன. ஆதீன மடத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 4.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சிவாச்சாரியார்கள், அறநிலையத்துறை அலுவலர்கள், காராம்பசு மற்றும் மேள தாளங்களுடன், இரண்டு ஆதீனங்களையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, பேஷ்கார் மற்றும் கோவில் சார்பில், மரியாதை கொடுக்கப்பட்டன. நூற்றுக்கும் அதிகமான பக்தர்களும், ஆதீனங்களுடன் அம்மன், சுவாமி சன்னிதிக்குள் செல்ல முயன்றனர். அப்போது, சில பட்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இளைய ஆதீனம் நித்யானந்தா, பக்தர்களை அமைதிப்படுத்தினார்.
பரிவட்டம்: மூத்த ஆதீனம் அருணகிரிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து, நாகூர் சன்னிதியில் சிறப்பு பூஜை மற்றும் தேவாரம், திருவாசகம் பாடல்களும், நாதஸ்வர கச்சேரியும் நடந்தன. இதில் பங்கேற்ற பின் ஆதீனங்கள், கோவிலில் இருந்து யானை மற்றும் அனைத்து மரியாதைகளுடன் மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எதிர்ப்பு: மதுரை ஆதீன மீட்புக்குழுவினர், நேற்று மடத்திற்கு சென்று வழிபாடு நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், ஜான்சிராணி பூங்கா அருகில் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி, பூஜைகள் நடத்தினர். தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, மதுரை ஆதீனத்தை மீட்கும்படி, சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், தேவர் தேசிய பேரவை திருமாறன், மீனாட்சி பிள்ளை அமைப்பு ஜானகிராமன், ஆலவாய் அங்கயற்கண்ணி பக்தர்சபை மாரிச்சாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.