கோவில் அடிமை நிறுத்து மக்கள் திரண்டு ஆதரவு
கோவை: கோவையில், கோவில் அடிமை நிறுத்து இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.கோவை, ஈஷா யோகா மையம் அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை துவக்கி, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, ஹிந்து கோவில்களை விடுவிக்கக் கோரி வருகிறார்.
இதற்கு, அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற கோவில்களில் பொதுமக்கள் பக்தி பாடல்களை பாடி, நேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவை மருதமலை முருகன் கோவிலில், கந்த சஷ்டி கவசம் பாடி ஆதரவு தெரிவித்தனர். அதேபோல், ஈஷா ஆதியோகி முன், ஏராளமானோர் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். இதேபோல, தஞ்சை பெரிய கோவிலில், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களுடன், உள்ளூர் மக்கள் இணைந்து, நேற்று மாலை, தேவார பாடல்களை பாடி ஆதரவை தெரிவித்தனர். கோவில் முன், நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, கோவில் அடிமை நிறுத்து என்ற பதாகையை ஏந்தி, ஆதரவை பதிவு செய்தனர்.