பங்குனி ருத்ர பூஜை திடீர் ரத்து: ராமேஸ்வரம் பக்தர்கள் வேதனை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் அதிகாரி அலட்சியத்தால், பங்குனி ருத்ர பூஜை ரத்து செய்யப்பட்டது. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
பங்குனி உத்திர விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் சுவாமி சன்னதி முன் நேற்று, 1,008 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. இதையடுத்து நடக்கும் திரிசங்கு பங்குனி ருத்ர பூஜை ரத்து செய்யப்பட்டது.அபிஷேகம்அதாவது, பங்குனியில் அதிகரிக்கும் வெயிலால், நோயில் இருந்து மக்களை காக்க வேண்டி, பல நுாறு ஆண்டுகளாக, ராமேஸ்வரம் கோவில் சுவாமி சன்னிதியில் இந்த பூஜை நடத்தப்படும். அப்போது திரிசங்கு, தங்கம் அணிவித்த வலம்புரி சங்கு, தங்க கலசத்தில் நிரப்பிய புனித கங்கை நீரால், சுவாமிக்கு கோவில் குருக்கள் அபிஷேகம் செய்வார்.முன்னதாக, பூஜைக்காக, கருவூலத்தில் இருக்கும் தங்க கலசம், திரிசங்கு, வலம்புரி சங்கு உள்ளிட்ட ஆபரண பூஜை பொருட்களை, கோவில் இணை ஆணையர் எடுத்து, குருக்களிடம் வழங்குவார்.
ஆனால், இணை ஆணையர் இல்லாததால், பொருட்களை எடுக்க முடியாமல், நேற்று ருத்ர பூஜை ரத்தானது, பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.ஹிந்து முன்னணி மாநில இளைஞரணி செயலர் சரவணன் கூறியதாவது:பிப்., 26ல் இடமாற்றம் செய்யப்பட்ட இணை ஆணையர் கல்யாணி, சில நாட்களுக்கு பின் கோவிலுக்கு வந்து, கருவூலத்தில் உள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரண பொருட்கள் பட்டியலை, புதிய இணை ஆணையரிடம் ஒப்படைக்க வேண்டும்.ஆனால், அவர் தற்போது வரை பட்டியலை வழங்காததால், நேற்று ருத்ர பூஜை ரத்தானது. ஆன்மிக மரபை மீறி, தன்னிச்சையாக செயல்பட்ட இணை ஆணையர் மீது, ஹிந்து அறநிலையத் துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.