கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வில் செப்பு காசு கண்டெடுப்பு
பெரம்பலுார்: கங்கைகொண்ட சோழபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழாய்வு பணிகளில், தற்போது, சீன நாட்டு பானை ஓடுகள், கூரை ஓடுகள் - ஆணிகள் மற்றும் செப்புக்காசுகள் ராஜேந்திர சோழனின் அரண்மனை சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 2020 2021ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணிகள் தமிழகம் முழுவதும் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கை கொண்டசோழபுரம் உட்பட 7 மாவட்டங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு இடம் தேர்வு செய்யும் பணிகள் கடந்த ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக, ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட 18 கிலோமீட்டர் தொலைவில் சென்று ட்ரோன் தொழில்நுட்பக் கருவிகள் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் மண்டிக்கிடந்த புல் புதர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் கடந்த பிப்., 21ம் தேதி முதல் ரேடார் கருவி மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. பத்துக்கு பத்து என்ற அளவில் குழிகள் தோண்டப்பட்டது. அப்போது, அந்த இடத்தில் இரண்டு அடுக்கு சுவர், பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்பு காசு போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், சீன நாட்டு பானை ஓடுகள், கூரை ஓடுகள், ஆணி வகைகள், செப்புக் காசு ஒன்று கிடைத்துள்ளது. எந்த நூற்றாண்டு செப்புக்காசு என்பது அவற்றை சுத்தம் செய்த பின்னரே தெரியவரும். ஏற்கனவே, இருந்த ராஜேந்திர சோழன் அரண்மனை சுவர் கிடைத்துள்ளது. அகழாய்வு இப்பொழுதுதான் துவங்கியுள்ளோம். மேலும் தோண்டத் தோண்ட, அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.