ஆத்மநாத ஸ்வாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமிக் கோவிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா நாளை(16ம் தேதி) காலை திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. 25ம் தேதி முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்க வாசகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவாவடுதுறை ஆதீனத்தின் கீழ் இயங்கிவரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் திருமஞ்சனத் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா 16ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. ராஜ அலங்காரத்தில் யோகாம்பிகை சமேதராக ஆத்மநாத சுவாமி திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் தொட்டு இழுக்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் செய்துள்ளனர்.