அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயர்வு
ADDED :1572 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில், கடந்த, 5ம் தேதி முதல் அனுமதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். வழக்கமாக, சிறப்பு தரிசன கட்டணம், 20 ரூபாய், விழா மற்றும் பவுர்ணமி நாட்களில், 50 ரூபாய் என, இரண்டு வகையாக வசூலிக்கப்பட்டது. தற்போது, 20 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்பட்டு, 50 ரூபாய் கட்டணத்தில் மட்டும், சிறப்பு தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். திடீர் கட்டண உயர்வால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மீண்டும், 20 ரூபாய் கட்டண டிக்கெட்டை நடைமுறைப்படுத்த, கோரிக்கை விடுத்துள்ளனர்.