உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண் நோய் தீர்க்கும் கருடன்

கண் நோய் தீர்க்கும் கருடன்


திருநெல்வேலி அருகிலுள்ள சீவலப்பேரியில் சுந்தரராஜப்பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள கருடனை தரிசித்தால் கண் நோய் தீரும்.        
 பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் தாமிரபரணி கரையில் பெருமாள் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தார். இந்த இடத்தை சுற்றி வந்த மகாலட்சுமியும் பெருமாளுடன் ஐக்கியமானாள். அதனால் இதற்கு ‘ஸ்ரீவலம் வந்த பேரி’ என பெயர் வந்தது. ‛ஸ்ரீ’ என்றால் ‛லட்சுமி’.  நாளடைவில் இப்பெயர் சீவலப்பேரி என்றானது. பெருமாளுக்கு
‘அழகர் சுந்தரராஜர்’  என பெயர் சூட்டப்பட்டது.    
 தாமிரபரணி, சித்ராநதி, கோதண்ட ராமநதி ஆகிய மூன்றும் கலக்கும் இடம் சீவலப்பேரி. இப்பகுதிக்கு முக்கூடல், திரிவேணி சங்கமம் என்றும் பெயருண்டு. மதுரையிலுள்ள அழகர்கோவிலை ‘வட திருமாலிருஞ்சோலை’ என்றும், சீவலப்பேரியை ‘தென் திருமாலிருஞ்சோலை’  என்றும் சொல்வர். இந்த கோயில் இரண்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. 12ம் நுாற்றாண்டில் மாறவர்ம வல்லப பாண்டியனால் விரிவுபடுத்தப்பட்டது.
 இங்கு சுடலைமாட சுவாமி, முண்டக சுவாமியும் காவல் தெய்வங்களாக உள்ளனர். பெருமாளின் தங்கையான விஷ்ணுதுர்கை  கருவறையில் சுவாமியுடன் காட்சியளிக்கிறாள். சீவலமங்கை, அலர்மேல்மங்கை தாயார்களுக்கு சன்னதி உள்ளது.      
   சீவலப்பேரி அருகிலுள்ள மணப்படையை தலைநகராகக் கொண்டு சுந்தரராஜ பாண்டியன் ஆட்சி செய்தார். அவருக்கு பார்வை மங்கிக் கொண்டே இருந்தது. அந்த சமயத்தில் கருங்குளம் கொண்டு செல்வதற்காக, கருட வாகனம் ஒன்றை சுமந்து வந்த பக்தர்கள் சீவலப்பேரியில் தங்கினர். அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள், தன் வாகனமான கருடனை சீவலப்பேரி கோயிலில் வைக்கும்படி  ஆணையிட்டார்.  மன்னரும் அதை ஏற்க அவரது பார்வைக்குறைபாடு நீங்கியது. இந்த கருடனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் கண்நோய்கள் தீரும்.
   அசுரகுருவான சுக்கிராச்சாரியாரின் தாயைக் கொன்றதால் சக்கரத்தாழ்வார் தோஷத்திற்கு ஆளானார். இதைப் போக்க சீவலப்பேரி முக்கூடல் ஆற்றில் நீராடி வழிபட்டார். கள்ளழகர் கோலத்தில் காட்சியளித்த பெருமாள் விமோசனம் அளித்தார். சக்கரத்தாழ்வார் நீராடிய இடம் சக்கர தீர்த்தம் எனப்படுகிறது. சித்ராபவுர்ணமியன்று இங்கு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது.               
 திருப்பதி வெங்கடாசலபதி, அனுமன் சன்னதிகள் இங்குள்ளன. சனிக்கிழமைகளில் வெண்ணெய்க்காப்பு, வடை மாலை சாத்துகின்றனர். தமிழ் புத்தாண்டன்று இங்கு தேர்த்திருவிழா நடக்கும். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடி முன்னோர்களை வழிபடுகின்றனர்.
எப்படி செல்வது
திருநெல்வேலி – புளியம்பட்டி சாலையில் 18 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !