மாரியம்மன் கோவிலில் 29ல் கும்பாபிஷேகம்
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், சின்னவலசு என்ற சுக்கிரமணியக்கவுண்டன்வலசு மகா கணபதி, மகா மாரியம்மன், விஷ்ணு துர்க்கை கோவிலில், வரும், 29ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முன்னதாக, நாளை காலை, 6 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்று புனித தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை, 6 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து பூஜைகள், யாக வேள்வி நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை, 6.30 மணிக்கு, லட்சுமி கணபதி பூஜையும், காலை, 9.30 மணிக்கு விநாயகர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கைக்கும், கோபுர கலசங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. அன்று காலை, 11 மணிக்கு பத்து வகை தரிசனம், பத்து வகை தானம், மஹா அபிஷேகம், அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 30ம் தேதி முதல் மண்டல பூஜை 48 நாட்களுக்கு நடக்கிறது. சிறப்பு நிகழ்ச்சியாக, 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு அருட்சொற்பொழிவும், இரவு, 8 மணிக்கு இசை நிகழ்ச்சியும், 29ம் தேதி காலை, 6 மணிக்கு பூங்கரகம், அக்னிகரகம் நிகழ்ச்சியும், இரவு, 8 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவுக்கு பால், தயிர், பழவகைகள், மூலிகைகள், தேங்காய், இளநீர், அன்னதானத்துக்கு காய் வகைகள், பச்சரிசி, நெய் ஆகிய பொருட்கள் அல்லது நிதியுதவியாக வழங்கலாம், என திருப்பணிக்குழுவினர் கேட்டுக் கொண்டனர்.