ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் துவக்கம்
சித்தூர்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் தென் கைலாயம் ஆக பிரசித்திப் பெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 16. 9. 2021 முதல் 20 .9 .2021 வரை 5 நாட்கள் தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் நடக்கும் பவித்ரோற்சவத்தின் முதல் நாளான இன்று கோயில் வளாகத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீ - (சிலந்தி), காள- (பாம்பு) ஹஸ்தி - ( யானை) மற்றும் பரத்வாஜ முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கு தட்சிணாமூர்த்தி சன்னதி எதிரில் மேடை அமைத்து முன்னதாக கலச ஸ்தாபனம் செய்யப்பட்டதோடு கலசப்பூஜை, புண்யாவசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து கற்பூர தீபாராதனை செய்ததோடு உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பரத்வாஜ முனிவரின் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம் உட்பட பல்வேறு சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு கோயில் வேத பண்டிதர்களால் வேத பாராயணம் நடத்தப்பட்டது .இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.