ஆதிபுரீஸ்வரர் கோயிலில் சாம்பிராணி தைலாபிஷேக தீப உற்சவம்
திருவொற்றியூர் : திருவொற்றியூரில் ஆதிபுரீஸ்வரர் சுவாமிக்கு, சாம்பிராணி தைலாபிஷேக கார்த்திகை தீப உற்சவம், நாளை நடக்கிறது.திருவொற்றியூர் தியாக ராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில், ஆதிபுரீஸ்வரருக்கு மூன்று நாட்கள் மட்டுமே கவசம் திறக்கப்பட்டு, புனுகு சாம்பிராணி தைலாபிஷேகமும், மஹா அபிஷேகமும் நடக்கும்.
இந்தாண்டுக்கான விழா, இன்று மாலை நடக்க உள்ளது.வரும், 20ம் தேதி வரை, காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடை திறந்திருக்கும்.அப்போது, ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்கலாம். 20ம் தேதி இரவு அர்த்தஜாம பூஜைக்கு பின், மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.ஆண்டுக்கொரு முறை, மூன்று நாட்கள் மட்டுமே ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்க முடியும் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.