சதுரகிரியில் மழை: பக்தர்கர்களுக்கு தடை
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் வனப்பகுதியில் பெய்யும் மழையினால் இன்று பௌர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் சாரல் மழையால் ஓடைகளில் லேசான நீர்வரத்து இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் முதல், வனப்பகுதியில் கனத்த சாரல் மழை பெய்து, ஓடைகளில் நீர்வரத்து அதிகமாகியது. இதனையடுத்து பவுர்ணமி வழிபாட்டிற்கு இன்று பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கோயிலில் வழக்கமானமுறையில் பவுர்ணமி பூஜைகள் பக்தர்களின்றி நடக்கும் எனவும் செயல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்தார். கடந்த மாதமும் மழையின் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாதநிலை இருந்தது. தற்போதும் பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டில் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் சதுரகிரி பக்தர்கள் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளனர்.