உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் 20 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களான, ஏகன், அனேகன் என்பதை விளக்கும் வகையில் நாளை அதிகாலை, 4:00 மணிக்கு சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அனேகன், ஏகன் என்பதை விளக்கும் வகையில் மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், ஹிந்து மக்கள் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் டி.செந்தில்குமார் தாக்கல் செய்த பொது நல வழக்கில், தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் செயல்படுகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை ஹிந்து மதத்தின் வளர்ச்சி பணிகளை செய்யாமல் எதிராக செயல்படுகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து கோவில்கள் மூடப்பட்டு, பின்னர் கட்டுப்பாடகள் நீக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்ற கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தவறானது.

மருத்துவம், போலீஸ், தீயணைப்பு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட ஏற்பாடுகளுடனும், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கோவிட் கட்டுப்பாட்டு விதிகளுடனும் அனைத்து பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என நவ.,6ல் அளித்த மனுவை முறையாக பரிசீலனை செய்து முடிவெடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜரானார்.

அவர் கூறியதாவது: நேற்று(நவ.,17) வரை 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். தீபத்திருவிழாவிற்கு 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் வருவார்கள். 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கிரிவலம் செல்வார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. 3 நாட்களுக்கு உள்ளூரை சேர்ந்த 3 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 7 ஆயிரம் பேரை அனுமதிக்க முடியும். கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் பின்பற்றுவதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அனைத்து மாநிலங்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படும்போது, தமிழகத்திலும் 20 ஆயிரம் பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பின்னர் அரசு சார்பில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் என்றும், இன்றும் நாளையும் கிரிவலத்திற்கு உள்ளூரை சேர்ந்த 5 ஆயிரம், வெளியூரை சேர்ந்த 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும், ஆனால் கோவிலுக்குள் அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தீபத்திருவிழாவில் கோவிட் விதிகளை பின்பற்றி 20 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 5 ஆயிரம் பேரும் ; மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 15 ஆயிரம் பேரும் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். பங்கேற்பவர்கள் கிரிவலம் செல்லலாம்; கிரிவல பாதையில் இருந்து தரிசனம் செய்யலாம். தீபத்திருவிழாவில் பங்கேற்பதற்கு 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பது அவசியம். நாளை மற்றும் நாளை மறுநாள் மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !