நத்தம் பெரிய பள்ளிவாசலில் சந்தன உரூஸ் விழா நடைபெற்றது
நத்தம்: நத்தம் சையது சாகுல் ஹமீது தர்ஹா சார்பில் உலக நன்மை வேண்டி சந்தன உரூஸ் விழா நடந்தது.
நத்தம் பெரிய பள்ளிவாசலில் உள்ள சையது சாகுல் ஹமீது ஆஷிக்கின் தர்காவில் சந்தன உருஸ் விழா நடந்தது. விழாவிற்காக நாகூரிலிருந்து கொண்டு புனித சந்தனம் குடத்தில் கொண்டுவரப்பட்டது. சலங்கை ஒலிக்க தர்ஹாவிலிருந்து டாக்டர் நசீர் அகமது சையது மீரான் தலையில் சந்தன குடம் சுமந்து செல்ல ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலம் சந்தன குடத் தெரு, பெரியகடைவீதி, மஸ்தான் பள்ளிவாசல் வழியாக வந்து மீண்டும் தர்காவை அடைந்தது. தொடர்ந்து அங்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், உலக நன்மை வேண்டி பிரார்த்தனையும் நடந்தது. இதில் வேம்பார்பட்டி அரசுப்பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கண்ணுமுகமது, முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், அதிமுக நகர அவைத் தலைவர் சேக் ஒலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை வக்கீல்கள் முகமது சாலியா, முகம்மது ஜூல்பிகர், இன்ஜினியர்கள் முகமதுசாலியா,முகமது மீரான், ஜல்வத்தி உள்ளிட்ட தர்ஹா நிர்வாகிகள் செய்திருந்தனர்.