சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் திருவண்ணாமலை தீப திருவிழா நிறைவு
ADDED :1411 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீப திருவிழா நிறைவடைந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கடந்த, 10ல், கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. இவை, 11 நாட்கள் தொடர்ந்து எரியும். கடந்த மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் கோவிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இதில் சண்டிகேஸ்வரர், ரிஷப வாகனத்தில் கோவிலில் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.