உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒமிக்ரான் கட்டுப்பாடுகள் வந்தால் சபரிமலை சீசனில் பாதிப்பு ஏற்படும்: தேவசம்போர்டு கவலை

ஒமிக்ரான் கட்டுப்பாடுகள் வந்தால் சபரிமலை சீசனில் பாதிப்பு ஏற்படும்: தேவசம்போர்டு கவலை

சபரிமலை: ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சபரிமலை சீசனை பாதிக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவலை அடைந்துள்ளது.சபரிமலை வருமானத்தை அடிப்படையாக கொண்டுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செயல்படுகிறது. மேலும் வருமானம் இல்லாத கோயில்களில் இந்த பணத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மண்டல மகரவிளக்கு சீசன் சரியாக நடைபெறாதாதல் தேவசம்போர்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அரசு அவ்வப்போது மானியம் வழங்கி வந்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஓரளவு வருமானம் வர தொடங்கியது. கொரோனா பரவல் கட்டுப்பட்டு வருவதால் நீலிமலை பாதையில் பயணம், சன்னிதானத்தில் எட்டு மணி நேரம் பக்தர்கள் தங்க அனுமதி, நெய்யபிேஷகம் நடத்த அனுமதி போன்ற கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க தேவசம்போர்டு முயற்சித்து வந்தது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கேரள மாநில அரசு ஆலோசித்து வருகிறது. இதனால் சபரிமலையில் கூடுதல் தளர்வுகளுக்கு அரசு அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேவசம்போர்டு கூட்டத்தில் இந்த விஷயம் ஆராயப்பட்டது. கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சீசனை பாதிக்கும் என்ற கருத்து பதிவு செய்யப்பட்டது. எனினும் அரசின் இறுதி முடிவை பொறுத்துதான் சபரிமலை கூடுதல் தளர்வுகள் வரும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !