உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யப்பனுக்கும் இருக்கிறது அறுபடை வீடு!

அய்யப்பனுக்கும் இருக்கிறது அறுபடை வீடு!

தமிழக பக்தர்கள், சபரிமலைக்கு மட்டும் சென்றால் பலன் இல்லை. முருகனுக்கு இருப்பது போன்று, அய்யப்பனுக்கும் அறுபடை வீடு உள்ளது. அந்த கோவில்களிலும் தரிசனம் செய்தால் தான், முழு பலன் கிடைக்கும் என்கின்றனர். இது குறித்து ஆன்மிக நெறியாளரும், அய்யப்ப பக்தருமான கிருஷ்ணகுமார் கூறியதாவது:

சபரிமலைக்கு செல்வோர் சொரிமுத்து அய்யனார் கோவிலில் தரிசனம் முடித்து தான், சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். அதுமட்டுமல்ல அச்சன் கோவில், குளத்துப்புழை, ஆரியங்காவு, மாம்பழத்துறை, பந்தளம், புலிக்குன்னுார், பொன்னம்பல மேடு உள்ளிட்ட தலங்களை தரிசித்து விட்டுத் தான், சபரிமலைக்கு படியேறி சென்று சாஸ்தாவை தரிசிக்க வேண்டும் என்ற ஐதீகமும் உண்டு.

ஆனால், இந்த நடைமுறையை மாற்றியுள்ள அய்யப்ப பக்தர்கள், நினைத்ததும் மாலை அணிந்து, நினைத்ததும் அய்யப்பன் கோவிலுக்கு செல்கின்றனர். இது நடைமுறையும் அல்ல; ஐதீகமும் இல்லை. எந்த கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும், சில அடிப்படை நியமனங்கள் உள்ளன.அதை பின்பற்றி, கடவுளை தரிசித்து திரும்பும் போது தான், அதன் முழு பலனும் கிடைக்கும். ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவில் மற்றும் பாபநாசம் வழியாகவே, சபரிமலை செல்ல வேண்டி இருந்தது. அந்நிலை மாறி, மலைப் பகுதிகளில் சாலை வசதி உருவானதோடு, வேறு வழிகளிலும் செல்ல, சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. அதனால், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லாமலேயே, சபரிமலைக்கு சென்று திரும்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

சபரிமலை பயணத்தின் போது செல்ல வேண்டிய பிற கோவில்கள் விபரம்:

பந்தளம்: சபரிமலையில் இருந்து 88 கி.மீ., துாரத்தில் திருவனந்தபுரம், கோட்டயத்தை இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். இது, அய்யப்பன் வளர்ந்த இடம்.அவர் மணிகண்டனாக வளர்ந்த அரண்மனையும், அவர் படித்து பயன்படுத்திய ஓலைகளும் உள்ளன. அங்குள்ள குளம், அய்யப்பன் குளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. அந்த குளத்தின் நீர் எப்போதுமே வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும். மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்து தான் புறப்படுகிறது.

அய்யனார் கோவில்: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோவிலில், அய்யப்பனே அய்யனார் பெயரில் அருள்பாலிக்கிறார்.பொதிகை மலைக்காடுகளில் வன விலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே, இந்த கோவில் அமைந்துள்ளது. தாமிரபரணியில் நீராடி அய்யனாரை வழிபட்டால், எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம்.

ஆரியங்காவு: சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா, ஆரியங்காவில் மாப்பிள்ளை அய்யப்பனாக கிரகஸ்த நிலையில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., துாரத்தில் கேரளா -- தமிழகம் எல்லை பகுதியில், இந்த கோவில் அமைந்துள்ளது. பரசுராமர் நிறுவியதாக கூறுகின்றனர். இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார்.

குளத்துப்புழை: கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில், சாஸ்தா கோவில் உள்ளது. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இத்தலத்தில் அய்யப்பன், குழந்தை வடிவமாக காட்சி தருகிறார். செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., துாரத்தில் இக்கோவில்
அமைந்துள்ளது.

அச்சன் கோவில்: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன் கோவில்; அய்யப்பனின் படை வீடுகளில் ஒன்று. அச்சன் கோவில் அரசனான அய்யப்பன் வீற்றிருக்கும் பகுதி, செங்கோட்டையில் இருந்து 28 கி.மீ., துாரத்தில் உள்ளது. அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள அய்யப்பன் விக்ரகங்கள், தீயாலும், இதர இயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால், அச்சன்கோவில் அய்யப்பன் கோவிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. ஐயப்பன் பயன்படுத்திய வாள் இத்திருத்தலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !