அனைத்து வழிபாட்டு தலங்களும் நள்ளிரவு வரை திறக்க அனுமதி
புதுச்சேரி: ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி, இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் சுவாமி தரிசனத்திற்கு நள்ளிரவு 12.30 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 15ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு, இன்று 31ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புத்தாண்டையொட்டி சில தளர்வுகளுடன் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, நேற்று 30ம் தேதி முதல் இரவில் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பூங்கா உள்ளிட்ட அனைத்து விதமான பொதுமக்கள் கூடும் இடங்கள், கடற்கரை சாலை இரவு 12.30 மணிக்குள் மூட வேண்டும். பொங்கல் பண்டிகை,அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள், சமூக, கலாசார நிகழ்ச்சிகளில் கொரோனா பாதுகாப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வைகுண்ட ஏகாதசியை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் இரவு 11.௦௦ மணி முதல் மறுநாள் அதிகாலை 5.௦௦ மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். இது இன்று 31ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.வழிபாட்டு தலங்களில் வழக்கம்போல் இரவு 10.௦௦ மணி வரை சுவாமி தரிசனம், அர்ச்சனை செய்யலாம். புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று 31ம் தேதி அனைத்து வழிபாட்டு தலங்களும் சுவாமி தரிசனத்திற்கு மட்டும் இரவு 10.௦௦ மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்யக் கிடையாது.வைகுண்ட ஏகாதசியன்று மட்டும் இரவு 10.௦௦ மணிக்கு பிறகும் கோவில்கள் திறந்திருக்கலாம்.