பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED :1393 days ago
கன்னிவாடி: தருமத்துப்பட்டியில் விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தருமத்துப்பட்டி தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். நேற்று நான்காம் ஆண்டு பூக்குழி இறங்குதல் விழா நடத்தினர். இதற்காக வடக்குத்தெரு மகா காளியம்மன் கோயில் முன்பு, நேற்று காலை முதல் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. குருசாமிகள் கணேசன் முருகேசன் தலைமையிலான குழுவினர், கிராம கோவில்களில் ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் அழைப்பு நடந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பின், வரிசையாக நின்று இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பூக்குழி இறங்குதலை தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.