திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பச்சிலை ஓவியங்கள்
நாகர்கோவில்: திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பச்சிலை ஓவியங்கள் வரையும் பணி தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மனாபசுவாமி கோயிலின் ஒத்த உருவம் கொண்ட கோயிலான இங்கு பெருமாள் அனந்த சயனத்தில் காட்சி தருகிறார். மன்னர் காலத்தில் தங்க தகடுகள் வேயப்பட்டு பளபளப்புடன் இருந்தது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தங்க தகடுகள் கொள்ளை போனது வெளிச்சத்துக்கு வந்தது. இதில் ஈடுபட்ட பூஜாரி உட்பட பலர் தற்கொலை செய்தனர். பலர் கோர்ட்டில் தண்டிக்கப்பட்டு ஜாமீனில் உள்ளனர். தற்போது இங்கு கும்பாபிேஷக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோயில் சுவரில் உள்ள பழங்கால பச்சிலை ஓவியங்கள் புதுப்பிக்கப்படுகிறது. கொரோனா காரணமாக சிறிது நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஓவியர் உண்ணி கூறியதாவது: கருவறையைச்சுற்றியுள்ள சிதலமடைந்த மியூரல் ஓவியங்கள், அதன் பழமை மாறாமல் இயற்கை வர்ணம் பூசப்பட்டு அதன் தன்மை மாறாமல் வரைந்து கொண்டிருக்கிறோம். சாதாரண ஓவியம் வரைவது போல் மியூரல் ஓவியங்கள் வரையமுடியாது. அதிக நேரம்பிடிக்கும் வேலையாகும். தற்போது வரைய திட்டமிட்டுள்ள ஓவியப்பணிகள் முடிய மூன்று மாதங்கள் வரை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.