உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனசே...ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மனசே...ரிலாக்ஸ் ப்ளீஸ்!


அந்த வீட்டுப்பெண் எப்போதும் பணிச்சுமையாலும், குடும்பத்தினர் மீதுள்ள அக்கறையாலும் பதற்றமுடன் இருப்பாள். அடிக்கடி எரிச்சல்படுவாள். ஆனால் சமீபத்தில் பதற்றம், கோபமின்றி இயல்பாக இருக்கத் தொடங்கினாள். ஒருநாள் அவளது கணவர், ‘‘நான் நண்பர்களுடன் மது அருந்த போகிறேன்’’ என்றார். அமைதியுடன் சம்மதித்தாள்.

மகன் தயங்கியபடி,‘‘அம்மா... நான் படிப்பில் பின்தங்கியுள்ளேன்’’ என்றான். அதற்கு அவள் ‘‘ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும். முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் படி’’ எனத் தெரிவித்தாள்.

மகள் ஓடி வந்து,‘‘அம்மா...காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்’’ என்றாள். அதற்கு அவள், ‘‘அதைக் கொண்டு போய் சரி செய்’’ என்றாள்.

அவளின் அமைதியைக் கண்ட குடும்பத்தினர் குழப்பத்திற்கு ஆளாயினர். மருந்து ஏதாவது சாப்பிட்டு தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாளோ என நினைத்தனர். அவர்களிடம் தன் நிலையை வெளிப்படுத்தினாள் அந்தப்பெண். ‘‘உண்மையை உணர்வதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொண்டேன். அவரவர் வாழ்க்கைக்கு அவரவரே பொறுப்பு. என் கோபம், பதற்றம், பயம், மன அழுத்தம், தைரியம் எதுவும் உங்களின் பிரச்னைகளை தீர்க்கப் போவதில்லை. அவை உடல்நலத்தை கெடுத்து பிரச்னைகளை அதிகப்படுத்தும்.

அன்பு, தைரியத்தை மட்டுமே என்னால் உங்களுக்கு அளிக்க முடியும். தேவைப்பட்டால் அறிவுரை சொல்வேன். உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.

ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் பிறவி எடுக்கவில்லை. இது உங்களுக்கான வாழ்க்கை. உங்கள் பிரச்னைக்கு நீங்களே பொறுப்பு.  மகிழ்ச்சியைத் தேடுவதற்கான அறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள். ஆகவே நான் அமைதியாகி விட்டேன்’’ என்றாள். குடும்பத்தினர் வாயடைத்து நின்றனர்.  இந்த உண்மையை உணர்ந்தால் நம் மனம் எப்போதும் ரிலாக்சாக இருக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !