வெறிச்சோடிய ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழா
திருவனந்தபுரம்:திருவனந்தபுரத்தில், லட்சக்கணக்கான பெண்கள் சாலையில் திரண்டு, ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு பொங்கல் வைக்கும் திருவிழா, கொரோனா காரணமாக மக்கள் இல்லாமல் வெறிச்சோடியது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவின் 10ம் நாளன்று, பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.இந்த கோவில், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் துவங்கி திருவனந்தபுரம் சாலை முழுதும், லட்சக்கணக்கான பெண்கள் வரிசையாக திரண்டு, செங்கல் அடுப்பில் பொங்கல் வைப்பர். கடந்த 2009ல், 25 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்தது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்த பொங்கல் விழா ரத்து செய்யப்பட்டது. இவ்வாண்டு பொங்கல் விழாவை, அதிகபட்சம் 1,500 பெண்களுடன் கோவில் மைதானத்தில் நடத்த, மாநில அரசு அனுமதி அளித்தது. ஆனால், மைதானத்தில் திருவிழாவை நடத்த, கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது. பக்தர்கள் அவரவர் வீட்டு வாசலிலேயே பொங்கல் வைத்து வழிபட, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் உள்ள அடுப்பில், காலை 10:50 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.இந்த பொங்கல் விழாவின் போது, பெண்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருவனந்தபுரம் சாலைகள், வெறிச்சோடி காணப்பட்டன.