நான்கு ஆண்டுகளுக்கு பின் நரசிம்மசாமி கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி
பீதர்: பீதரில் உள்ளது பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில். இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அங்குள்ள 200 மீட்டர் நீளமுள்ள தண்ணீர் நிரம்பிய குகையை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கோவிலுக்கு கர்நாடகா மட்டும் அல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு முன்புறம் உள்ள குகையில் எப்போதும், 4 – 5 அடிக்கு நீர் நிரம்பியே இருக்கும். நெஞ்சு வரை நிரம்பிய தண்ணீரில் நீந்தியபடி சென்று தான் நரசிம்மரை தரிசனம் செய்ய வேண்டும்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த குகையில் அதிக அளவில் தண்ணீர் தேங்காது. அதிகப்படியாக வரும் தண்ணீர் தானாகவே வெளியேறும் வகையில் இயற்கையான வடிவமைப்பில் அமைந்துள்ளது. மேலும் இந்த குகையில் எப்போதும் தண்ணீர் வற்றாது. ஆனால் நான்கு ஆண்டுக்கு முன் இந்த குகையில் தண்ணீர் வற்றி ஒரு அடிக்கும் குறைவாகவே இருந்தது. இந்த தண்ணீரும் வெளியே செல்லாமால் அப்படியே தேங்கி, அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசியது. இந்த தண்ணீரை கடந்து சென்றால் பக்தர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும் குகைக்குள் இருந்த ஆக்சிஜன் வினியோகிக்கும் குழாயும் சேதம் அடைந்திருந்தது. இதை பராமரித்து சரி செய்த பின் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் நான்கு ஆண்டாக பக்தர்களுக்கு சாமி தரினம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது குகைக்குள் தண்ணீர் தேவயைான அளவு உள்ளதாலும், கொரோனா விதிமுறைகளில் தளர்வு இருப்பதாலும் இம்மாதம் 15 முதல் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2018க்கு பின் நான்கு ஆண்டுகள் கழித்து பக்தர்கள் நரசிம்மசாமி தரிசனம் கிடைத் து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.