ஆகஸ்ட் 11, 12ம் தேதி அம்பையில் தெப்பத்திருவிழா!
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் இன்றும், நாளையும் (14,15) நடக்கவிருந்த தெப்ப உற்சவம் வரும் ஆகஸ்ட் 11,12ம் தேதிகளில் நடக்கிறது. அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோயில் அருகே உள்ள தெப்ப குளத்தில் இன்று(14ம் தேதி) காசிநாத சுவாமி கோயில் தெப்ப திருவிழாவும், நாளை(15ம் தேதி) கிருஷ்ண சுவாமி கோயில் தெப்ப திருவிழாவும் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு பருவ மழை பொய்த்து வருவதால், பாபநாசம் அணையின் நீர்மட்ட உயர்வில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில், தெப்பத்தில் தண்ணீர் பெருக்குவதில் சிக்கல் எழுந்தது. இதனால் தெப்ப உற்சவம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது. இச்சூழ்நிலையில் ஒத்தி வைக்கப்பட்ட தெப்ப உற்சவம் வரும் ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12ம் தேதிகளில் நடத்தப்படும் என தெப்ப கமிட்டியினர் தெரிவித்துள்ளனர்.