சங்கரநாராயண சுவாமி கோயிலில் வியாபரிகள் அடாவடி பூஜை: பக்தர்கள் அவதி!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் பக்தர்களை வழிமறித்து பூஜை பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் சமேததராக அருள்பாலித்து வருகின்றனர். மேலும் "அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு தனது உடலின் ஒரு பாதியை சங்கரராகவும், மற்றொரு பாதியை நாராயணராகவும் காட்சி கொடுத்த சங்கரநாராயண சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. சங்கரலிங்கசுவாமி அம்பாளின் வேண்டுகோளை ஏற்று சங்கரநாராயணசுவாமியாக காட்சி கொடுத்த அரிய நிகழ்ச்சி தான் சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் "ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதவிர மாத கடைசி வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களில் சங்கரநாராயணசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் சுவாமி சன்னதி உள்ளிட்ட கோயிலுக்கு வரும் வழியில் உள்ள கடைகளில் பூஜை பொருட்களை வாங்கி செல்வார்கள். ஏராளமான பக்தர்கள் பூஜை பொருட்களை வாங்காமல் சுவாமி தரிசனம் மட்டும் செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதுபோல் பூஜைப் பொருட்களை வாங்காமல் செல்லும் பக்தர்களை கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள பூஜைப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் கோயிலுக்கு செல்லும் வழியை மறித்து நின்று கொண்டு பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். வாங்க மறுக்கும் பக்தர்களை பின்தொடர்ந்து சென்று பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். ஆனி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று சங்கரநாராயண சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்களை கட்டாயப்படுத்தி பூஜை பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் முறையான விலையில் விற்பனை செய்வதில்லை என கூறப்படுகிறது. அர்ச்சனைக்கான பொருட்கள் "யானை விலை க்கு விற்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பக்தர்கள் பலமுறை கோயில் நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆடிப்தபசு திருவிழா வரும் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. விழாவை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவது வழக்கம். அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பூஜை பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்தும் அடாவடி வியாபாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.