ராஜகணபதி கோவிலில் மகாசிவராத்திரி
மேட்டுப்பாளையம்: சிறுமுகையில், ராஜகணபதி கோவிலில், இன்று மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது.
சிறுமுகை வ.உ.சி. நகரில் ராஜகணபதி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று மாலை, 5.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன், 5 கால பூஜைகள் துவங்குகின்றன. 108 மூலிகை திரவியங்களால் அபிஷேக பூஜைகள், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, 108 மூலிகை அபிஷேகம் செய்த கலசத்திலிருந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இரவு வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகான பஜனை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இதேபோன்று சிறுமுகை எலகம்பாளையத்தில் ராமநாகலிங்கேஷ்வரர் மற்றும் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. மாலை, 6:00 மணி முதல் பூஜைகள் தொடங்குகின்றன. இரவு, 10:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும், இரண்டாம் தேதி காலை, 6:00 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும் நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு இரவு, 7:00 மணியில் இருந்து அதிகாலை, 6:00 மணி வரை பஜனையும், ஆன்மீக சொற்பொழிவு, வயலின் கச்சேரி நடன நிகழ்ச்சி ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.