திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் சாமி கும்பிபட்ட புதுச்சேரி முதல்வர்!
சென்னை: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வரிசையில் நின்று சாமி கும்பிட்டார். திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜர் சுவாமி உடனுறை, அருள்மிகு வடிவுடையம்மன் கோவில் உள்ளது. பழமையானதும், பிரபலமான இக்கோவிலுக்கு, நேற்று காலை 10.15 மணிக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீரென வந்தார். அங்கு, அருள்மிகு வடிவுடையம்மன் சன்னதி, அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் சன்னதி, விநாயகர், முருகன் ஆகிய சன்னதியில் சாமி கும்பிட்டார் ரங்கசாமி. வழக்கமாக, வெள்ளிக்கிழமையில், சிறப்பு பூஜைக்கு அனுமதி இல்லாததால், பக்தர்களோடு பக்தராக, முதல்வர் ரங்கசாமி வரிசையில் நின்று, சாமி கும்பிட்டதை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கோவில் ஊழியர்களுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி என தெரிய வந்ததும், வடிவுடையம்மன் மற்றும் ஆதிபுரீஸ்வரர் சன்னதியில், அவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை முடித்து திரும்பும்போது, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் திருப்பணிக்காக, தனது பெயரில், 25 ஆயிரம் ரூபாய், பாஞ்சாலி என்ற பெயரில், 25 ஆயிரம் ரூபாய் என, மொத்தம் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை வழங்கினார். பின், 10.45 மணிக்கு கோவிலிலிருந்து புறப்பட்டு சென்றார்.