பவானியில் கோவில் கருவறைக்குள் செல்ல அனுமதி: பால், புனித நீர் வழிபாடு
பவானி: பவானியில் செல்லியாண்டி அம்மன் கோவில் கருவறைக்குள் சென்று, பக்தர்கள் பால், புனித நீர் ஊற்றி வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் பவானி செல்லியாண்டி அம்மன் கோவிலில், நடப்பாண்டு மாசி திருவிழா கடந்த மாதம், 15ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இக்கோவிலில் கருவறைக்குள் சென்று பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு இந்நிகழ்வு தொடங்கியது.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மன் சிலைக்கு புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான, சேறு பூசும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் (குழந்தைகள் முதல் பெரியவர் வரை), உடலில் சேறு பூசி, ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதனால் பவானியில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ௫௦ ஆயிரம் பேர் தரிசனம்
‘‘கருவறைக்குள் சென்று வழிபடும் நிகழ்வு, நேற்று முன்தினம் இரவு, ௯:45 மணிக்கு தொடங்கி, நேற்று மதியம், 1:00 மணிக்கு முடிந்தது. இதில் ஆண், பெண் பக்தர்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என, 50 ஆயிரம் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்,’’ என்று, செல்லியாண்டியம்மன் கோவில் செயல் அலுவலர் (பொ) செல்வக்குமார் தெரிவித்தார்.