வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோயிலில் தேரோட்டம்
வெள்ளகோவில்: வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி திருக்கோவில் மாசி மஹாசிவன்ராத்திரி 139 ம் ஆண்டு தேர்த்திருவிழா இரண்டாம் நாளான நேற்று இரண்டாம் நிலையை ( கோவிலின் பின்புறம் ) அடைந்தது.
நேற்று வீரக்குமார சுவாமியின் காவல் தெய்வமாக விளங்கும் வீரபாகு சுவாமியுடன் சிறிய தேர் சிறியவர்கள் முதல் பெண்கள் வரை முன்னாள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சிறிய தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். சிறிய தேரைத் தொடர்ந்து வீரக்குமாரசாமி மற்றும் செல்லாண்டியம்மன் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரினை ஆண்கள் 300க்கும் மேற்பட்டோர் இடது, வலது, ( சங்கிலிகளை ) தேர் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வீரக்குமாரசாமியை உள்ளம் உருக வேண்டினால் வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆண்கள் மற்றும் பெண்கள் வருடம் ஒருமுறை வரும் தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் எங்கு சென்றாலும் தேர் இழுக்கும் போது கண்டிப்பாக இங்கு வந்து விடுவார்கள் என கூறுகின்றனர்.
இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருத்தேர் நிலையை வந்து சேரும், தொடர்ந்து சுவாமி தேர்க்கால் பவனி தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெறுகிறது. மார்ச் 4 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை 12 நாட்கள் ஒவ்வொரு குலத்தவர்களின் மண்டப கட்டளை நடைபெறும். மார்ச் 16 ஆம் தேதி புதன்கிழமை மஞ்சள் நீர் பூஜை விழாவுடன் நிறைவடைகிறது. கூட்டம் சேர்க்காமல் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை நிர்வாகம் இணைந்து அறிவுறுத்தலின் பேரில் தேர் கடைகள் 15 நாள் போடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளகோவில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக கோவில் தெப்பக்குளம் அருகிலுள்ள வேறொரு தனியார் மைதானத்தில் மரணக்கிணறு, ஜெயிண்ட் வீல், ராட்டன் தூரி, கொலம்பஸ், பிரேக் டான்ஸ் மற்றும் சிறியவர்கள் விளையாடும் சிறிய தூரிகள், பட்டாணி, சுண்டல், அப்பளம் போன்ற தற்காலிக வண்டி கடைகள், தின்பண்ட கடைகள் கோவிலின் வடபுறம் செயல்பட்டு வருகிறது.