உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழநி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

வடபழநி ஆண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவிலில் மஹா கும்பாபிஷேகத்தை அடுத்து, சத கலசாபிஷேகத்துடன், மண்டலாபிஷேக பூஜை நேற்று நிறைவடைந்தது.

சென்னை வடபழநி ஆண்டவர் முருகன் கோவிலில், பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்பட்டு, ஜன., 23ம் தேதி, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதைத் தொடர்ந்து நடந்த மண்டலாபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கான பூர்த்தி பூஜைகள் கோவிலில் சிறப்பாக நடைபெற்றன. இதை முன்னிட்டு, முதல் கால பூஜை நேற்று முன்தினம் மாலை ஆரம்பமானது.

இதில், வடபழநி ஆண்டவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டு, பூர்ணாஹுதி நடந்தது.நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் இரண்டாம் கால பூஜைகள் துவங்கி, சிறப்பு ஹோமங்கள், வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணங்களும் நடந்தன. காலை 9:30 மணிக்கு பூர்ணாஹுதியும், சதகலசாபிஷேகமும் நடந்தது.இதில், பால், தயிர் என, அனைத்து சிறப்பு திரவியங்களுடனான அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடந்தது. பிள்ளையார்பட்டி கே.பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், 40 சிவாச்சாரியர்கள் பங்கேற்று மண்டலாபிஷேக பூர்த்தி பூஜைகளை நடத்தினர்.இந்நிகழ்வில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருப்பணி உபயதாரர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது.

மண்டலாபிஷேக பூர்த்தி பூஜையில், பக்தர்கள் எந்த இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து வசதிகளையும், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரேணுகா தேவி மற்றும் தர்க்கார் எல்.ஆதிமூலம் ஆகியோர் செய்திருந்தனர்.இதில், மாணிக்கம் -- கோபுர சிற்பங்கள் வர்ணம் பூசுதல் மற்றும் கலை ஓவிய படங்கள்; சதீஷ்குமார் - - உற்சவர், யாகசாலை மற்றும் அனைத்து கல் திருப்பணி; பார்த்திபன் -- சாலஹாரம், 18 சித்தர்கள் சுதைகள் வேலை; பாபு -- சித்தர் ஆலயம் வர்ணம் பூசுதல் மற்றும் சுற்றுச்சவர் வர்ணம் பூசுதல்.பாபு நடராஜன் -- அனைத்து கட்டட வேலைகள்; நாகராஜன் -- அனைத்து மின் சாதன வேலைகள்; மோகன் -- திருவாச்சி, பீடம் மற்றும் பித்தளை வேலைகள்; ரமேஷ் -- மூலவர், உற்சவர் மற்றும் திருகல்யாண சன்னிதி மரக் கதவுகள்; நாகராஜ் -  நிலை விளக்குகள் மற்றும் பெயர் பலகைகள்; கந்தன் -- கந்தபுராணம், ஸ்தல புராணம் மற்றும் மேற்கூரை ஓவியங்கள்.பாஸ்கர் -- ஆதிபீடம் மற்றும் திருமடப்பள்ளி கட்டட வடிவமைப்பு பணி; குணசேகரன் - சன்னிதி கருங்கல் சுவர் சுத்தம் செய்யும் பணி; தயாளன் - அனைத்து இரும்பு வேலைகள் என, கோவிலில் திருப்பணிகளை மேற்கொண்ட ஸ்தபதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !