தென் திருப்பதி கோவிலில் தெப்ப உற்சவ வைபவம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோவில், கே.ஜி. டெனிம் மற்றும் கண்ணபிரான் மில்ஸ் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக உருவாக்கப்பட்ட, தனிப்பட்ட பிரார்த்தனைக் கூடமாகும். இங்கு, 13ம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் கம்பெனி வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.
முதல் நாள் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் உடன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். நேற்று நவநீத கிருஷ்ணர், ருக்மணி சமேதராக தெப்பத்தேரில் எழுந்தருளி, குளத்தில வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதையடுத்து புறப்பாடும், மாலை நேர பூஜைகளும், இரவு ஏகாந்த சேவையும் நடந்தன. மூன்று, நான்கு, ஐந்து ஆகிய மூன்று நாட்களும், மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து, தெப்பத் தேரில் எழுந்தருளுகிறார். நேற்று நடந்த தெப்ப உற்சவ விழாவில் கே.ஜி., குரூப்ஸ் கம்பெனிகளின் தலைவர் பாலகிருஷ்ணன், கண்ணபிரான் மில்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீ ஹரி பாலகிருஷ்ணன் மற்றும் கண்ணபிரான் மில் ஊழியர்கள், கே.ஜி., டெனிம் மில் ஊழியர் குடும்பத்தினர், இவ்விழாவில் பங்கேற்றனர்.