கபாலீஸ்வரர் கோவில் குளத்தில் மயில் சிலை தேடும் பணி தீவிரம்
சென்னை : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காணாமல் போன மயில் சிலையை, கோவில் குளத்தில் தேடும் பணியில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், புன்னைவனநாதர் சன்னதியில், லிங்கத்தை மலரால் அர்ச்சிக்கும் மயில் சிலை இருந்தது. 2004ம் ஆண்டு கும்பாபிஷேகத்திற்கு பின் அந்த சிலை மாயமானது. அதற்கு பதிலாக பாம்பை அலகில் வைத்திருக்கும் மயில் சிலை வைக்கப்பட்டுஇருந்தது.இது ஆகம விதிகளுக்கு எதிரானது; புதிய சிலையை அகற்றிவிட்டு, ஏற்கனவே இருந்த சிலையை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று, குளத்தில் சிலை உள்ளதா என்பதை கண்டறிய, நீதிபதிகள் இரண்டு வார அவகாசம்வழங்கினர்.நீதிமன்ற அனுமதியை அடுத்து, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளத்தில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு வாயிலாக, மயில் சிலையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், பிரத்யேக கருவிகளுடன் நீச்சல் வீரர்களும் குளத்தில் மூழ்கி மயில் சிலையை நேற்று மாலை வரை தேடினர். சிலை கிடைக்காததால் இன்றும் தேடுதல் பணியை தொடர உள்ளனர்.