வடபழநி ஆண்டவர் கோவில் தெப்ப திருவிழா கோலாகலம்
வடபழநி: நான்கு ஆண்டுகளுக்கு பின், சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது.சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில் நடைபெறும் விழாக்களில், பங்குனி உத்திர தெப்ப திருவிழா விசேஷமானது.
மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.கொரோனா உள்ளிட்ட காரணங்களால், தெப்பத்திருவிழா நான்கு ஆண்டுகள் நிறுத்தப்பட்டிருந்தது.நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்த 19ம் தேதி விழா வெகு விமரிமையாக துவங்கியது.தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று முன்தினம், சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முதல் நாள் திருக்குளத்தை மூன்று முறையும், இரண்டாவது நாளில் ஐந்து முறையும் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அதேபோல், மூன்றாவது நாளான நேற்று, சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
சுவாமி, கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகள் வழியாக, திருக்குளத்தை ஏழு முறை சுற்றி வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், இணை கமிஷனர் ரேணுகாதேவி தலைமையிலான ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மேலும், விழாவிற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்த வடபழநி இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜ் தலைமையிலான போலீசாருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பரவசமூட்டிய இசைக்கருவிகள்: முருகன் கோவில்களின் திருவிழா காலங்களில், நுாறாண்டுக்கு மேலாக பல்வேறு பாரம்பரிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, முக்கிய திருவிழாக்களின் போது, பக்தர்களை பரவசப்படுத்துவது வழக்கம். காவடி எடுக்கும் பக்தர்கள், நையாண்டி மேளம், பம்பை, உடுக்கை, சேகண்டி போன்ற இசைக்கருவிகள் முழங்க கோவிலுக்கு வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். வடபழநி ஆண்டவர் திருக்கோவிலின் தெப்பத் திருவிழாவிலும், இத்தகைய இசைக்கருவிகள் முழங்கின. தெப்பத்திருவிழாவின் மூன்று நாட்களிலும், ௩௦க்கு மேற்பட்டோர் இடம் பெற்ற குழுவினர், கயிலாய வாத்தியங்களை இசைத்து, பக்தர்களை பரவசப்படுத்தினர்.