அவிநாசி தேரோட்ட நேரம் மாற்றியமைக்க ஆட்சேபனை
அவிநாசி: அவிநாசி கோவில் தேரோட்டம் நேரத்தை மாற்றியமைக்க ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி, காந்திபுரத்தில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தார் அறக்கட்டளை தலைவர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனு: ஆண்டுதோறும், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, ஆகம விதிப்படி முறையாக நடந்து வருகிறது. இந்தாண்டு, தேரோட்ட நேரத்தை மாற்றியமைப்பது குறித்து, கோவில் நிர்வாகம், கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. வழக்கம் போல், தேரோட்டம் நடைபெறும் நேரத்திலேயே தேரோட்டத்தை நடத்த வேண்டும்; கால நேரத்தை மாற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். எங்கள் சமூகத்தின் சார்பில், அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோவிலில், அலகு குத்தும் நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம், மே, 11ம் தேதி மாலை, 4:00 மணி முதல், 7:00 மணிவரை நான்கு ரத வீதிகளிலும் நடைபெறும்; வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.