ரமலான் நோன்பு மகத்துவம்
நோன்பு இறைவனின் அருட்கொடை: ஹாஜி எம்.முகமது அயூப், தலைவர், பெரிய பள்ளிவாசல் ஜமாத், விருதுநகர்: 12 வயதில் இருந்து நோன்பு இருக்கிறேன். இதுவரை ஒரு ஆண்டு கூட நோன்பிருக்க தவறியதில்லை. இறைவனுக்காக 30 நாட்கள் பசித்திருந்து உலக மக்கள் சகோதரத்துவமாக இருப்பதற்காக இறைவன் வழங்கிய அருட்கொடையாக தான் இந்த நோன்பை பார்க்கிறோம். நாங்கள் வழக்கமாக ஜகாத் எனும் ஏழைகளின் வரியை பகிர்ந்தளிக்கிறோம். இது ரமலானில் அதிகளவில் செய்கிறோம். எங்கள் ஜமாத்தில் இருந்து கூட்டமைப்பாக தொடர்ந்து தகுதியான ஏழைகளுக்கான வரியை பகிர்ந்து வருகிறோம். மகிழ்ச்சிக்கான இம்மாதத்தில் இறைவன் வழிகாட்டியபடி தொடர்ந்து நேர்த்தியாக நோன்பிருந்து ஏக இறைவனின் ஆசியை பெறுவோம்.
அசுத்தங்கள் நீங்கி பரிசுத்தமாக்கும்: மவுலவி உமர் பாரூக் தாவூதி, இமாம், பெரியபள்ளிவாசல், விருதுநகர்: ரமலான் என்பது மகிழ்ச்சிக்கான மாதம். இஸ்லாமியர்கள் மற்ற மாதங்களை விட ரமலான் மாதத்தை வரவேற்று மகிழ்வர். நோன்பு முடிந்த பிறகு மற்ற மாதங்களில் நோன்பில் செய்த வணக்கங்கள், வழிபாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என பிரார்த்திப்போம். நோன்பு எனக்கு சொந்தமானது அல்லா கூறுகிறார். நோன்பு இறையச்சத்தோடு வணங்கி வழிபடவும், இறைவனை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது. உடல், மன ரீதியான கழிவுகள் சுத்தம் செய்யப்படுகிறது. உடல், உள்ளத்தின் அசுத்தங்கள் நீங்கி பரிசுத்தமாகிறது. ஆன்மா வலிமை பெறுகிறது.
உடலும் உள்ளமும் நலம் பெறும்: மெளலவி ஏ.முஹம்மது ஷர்புத்தீன் பைஜி, இமாம், பெரிய பள்ளிவாசல், சாத்துார்: நீங்கள் பேசினால் சரியான சொல்லையே பேசுங்கள் என இறைதுாதர் நபிகள் நாயகம் கூறினார். நோன்பு பாவங்களிலிருந்து காக்கும் கேடயம். நோன்பு நாளில் அருவருப்பாக பேச வேண்டாம். ரமலான் நோன்பு எனும் கடமை மனிதனுக்கு மாபெரும் மருத்துவமாக அமையப்பெற்றுள்ளது. நோன்பின் மூலம் உடலும் உள்ளமும் சார்ந்த ஆரோக்கியம் கிடைப்பதே இறைநாட்டம் ஆகும் . இயற்கை மருத்துவத்தில் உணவு என்பது மருத்துவம் என நிரூபிக்கப்பட்டுள்ளது. நோன்பு இருப்பதால் வாழ்நாள் அதிகமாகும். இளமையோடு இருப்பதற்கு நோன்பு உதவும். எவ்விதநோயும் உண்டாகாத மருந்து ரமலான் நோன்பு. எனவே ஒவ்வொரு முஸ்லிமின் மீது நோன்பு நோற்பது கட்டாயக் கடமையாக்கப்பட்டுள்ளது, என்றார்.
பலன் இம்மையிலும், மறுமையிலும் உண்டு: டாக்டர் சாதலி, ஆப்டோமெட்டிரிஸ்ட், அருப்புக்கோட்டை: நான் 15 ஆண்டுகளாக நோன்பு இருந்து வருகிறேன். ரமலான் மாதத்தில், நோன்பு இருந்தால், ஆசைகளை கட்டுப்படுத்துதல், எதிலும் ஆவல் கொள்ளாமல் இருத்தல், எந்த வித வாழ்வியல் தவறுகளையும் நினைக்காமல் இருத்தல் போன்றவற்றில் அனுபவம் கிடைக்கிறது. பசியின் உணர்வை புரிந்து கொள்வதால் பசியால் வாடும் ஏழைகளின் நிலை பற்றி உணர முடிகிறது. நம் உடலை பொறுத்தமட்டில், உணவு செரிமான சுழற்சியை முற்றிலும் மறுசுழற்சிக்கு மாற்றுகிறது. உடலாலும், மனதாலும் தனி மனிதன் தன்னை நேர்த்தி படுத்துவதற்கு, இந்த ரமலான் நோன்பு உதவுகிறது.
தானதர்மங்கள் செய்யும் மாதம்: ஐ.ஏ.எஸ்.,அகமது அப்துல்காதர், வீரசோழன்: ரமலான் மாதம் பிறந்த இரவே அல்லாஹ் தன் படைப்புகளின் மீது நோட்டஞ் செலுத்துகிறான். அதற்கான நற்கூலியை பலமடங்கு இம்மாதத்தில் வழங்குகின்றான். பசி என்பதை யாவர்களுக்கும் உணர்த்தும் மாதமாகவும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிகள், தானதர்மங்கள் செய்யும் மாதமாகவும், சகோதர சமுதாய மக்களுக்கும் உதவிகள் செய்து நோன்பு கஞ்சி வழங்கி சமூக நல்லிணக்கத்தைப் பேணும் மாதமாகவும் ரமலான் நோன்பு அமைந்துள்ளது. 38 வருடமாக நோன்பு இருந்து வருகிறேன். அதிகாலை 4:00 மணியிலிருந்து இரவு 6. 36 மணி வரை நோன்பு கடைபிடித்து வருகிறேன். ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றவாறு மாறுபடும். வருமானத்தில் இரண்டரை சதவீதம் தர்மங்கள் செய்ய பயன்படுத்த வேண்டும்.
பாவங்கள் செய்யாமல் இருக்க வேண்டும்: முகமது ரிபாஸ், மதரசா தக்வா பள்ளிவாசல் இமாம்: நான் 16 வருடங்களாக நோன்பு கடைப்பிடித்து வருகின்றேன். நோன்பின் போது சூரியன் உதிப்பதற்கு முன் உணவு சாப்பிட்டு , சூரியன் மறைவது வரை எதுவும் சாப்பிட கூடாது. ரமலான் மாதத்தில் தான் குர் ஆன் அருளப்பட்டது. நோன்பு என்றால் அரபி மொழியில் சவ்ம் என்று அர்த்தம். அதாவது தடுத்துக் கொள்ளுதல் என்ற பொருள்படும். நோன்பு கடைப்பிடிக்கும் காலங்களில் உணவு, நீர் அருந்துவதை தடுப்பது மட்டுமல்ல தீய செயல்கள், பாவங்கள் செய்யாமல், தீய வார்த்தைகள் பேசாமல் இருத்தலே சவ்ம்.
ஐந்து நேரம் தொழும் பாக்கியம்: மஹபூப்ஜான், தலைவர், ஜூம்மா புதுபள்ளிவாசல், ஸ்ரீவில்லிபுத்தூர்: நான் கடந்த முப்பது வருடத்திற்கு மேலாக நோன்பு இருந்து வருகிறேன். நோன்பு இருப்பதால் ஐந்து நேரமும் தொழும் பாக்கியம் கிடைக்கிறது. ஏழைகளின் பசியை ஒவ்வொருவரும் அறியும் தன்மையை பெற்று, அதனால் பிறருக்கு தானம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவாகும். ரமலான் மாதம் அருள் நிறைந்தது. நன்மைகள் அதிகம் செய்யும். அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம். சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம். நோன்பு நாட்களில் உலகில் அனைத்து சமுதாய மக்களும் நோய் நொடி இன்றி சுபிட்சமாக வாழவும், நன்மை பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்வேன்.
நபிகள் வார்த்தைகளை பின்பற்றுகிறோம்: சம்சுதீன், செயலாளர், ஈத்கா பள்ளி வாசல், ராஜபாளையம்: ஒவ்வொரு இஸ்லாமியர்களும் நபிகள் கூறியபடி ரமலான் மாத நோன்பிருந்து தங்கள் உடலையும் மனதையும் சுத்தப்படுத்துகிறோம். அதிகாலை முதல் மாலை வரை எச்சிலையும் விழுங்காமல் இறைவன் பெயரை மனதில் வைத்து எந்த ஒரு தடைகள் ஏற்படினும் விலகி செல்கிறோம். ஒவ்வொரு நாள் ஆண்கள் அருகிலுள்ள பள்ளிவாசலில் வைத்தும், பெண்கள் அவர்களின் வீடுகளில் வைத்தும் நோன்பு திறக்கிறோம். சுய கட்டுப்பாடுடன் மேற்கொள்ளும் இக்கடமை இறைவன் மேல் நான் இன்று நோன்பு வைத்துள்ளேன் என்ற உறுதி மொழி மூலம் பசித்தீயை கட்டுப்படுத்தும் வலிமையைத் தந்து விடுகிறது. உண்மையும், அன்பையும் இந்நோன்பு வெளிப்படுத்துகிறது.