உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கண்டியம்மன் கோவில் நிலங்கள் ஆய்வு

உடுமலை கண்டியம்மன் கோவில் நிலங்கள் ஆய்வு

உடுமலை: உடுமலை அருகே கண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான  ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்கள் குறித்து தினமலர்  செய்தி எதிரொலியாக  இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.உடுமலை அருகேயுள்ள சோமவாரப்பட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்டியம்மன் கோவில் உள்ளது.  இக்கோவில் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகிறது; சொந்தமான  127 ஏக்கர் நிலங்களும்  ஆக்கிரமிப்பாளர் வசமே உள் ளன.  நிலங்களை ஒப்படைக்காததால், இந்நிலங்களை பயன்படுத்துபவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, இணை ஆணையர் மூலமாக வழக்கு தொடரப்பட்டு நடந்து வருகிறது. இது குறித்து  தினமலரில் கடந்த மாதம் 25ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது.  நிலங்கள் குறித்து அதிகாரிகள் ரகசிய சர்வே  மேற்கொண்டனர்.  இந்நிலையில், நேற்று  அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கும் பகுதி மற்றும்  நிலங்கள் பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை  சேகரித்தனர்.   இந்நிலையில்,  பெதப்பம்பட்டி கோவில், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் குறித்த தகவல்களுடன்  நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

அதில்,  திருப்பூர் மாவட்டம் சோமவாரப்பட்டி ஊராட்சி கண்டியம்மன் கோவில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ளது. கோவிலுக்கு சொந்தமான புன்செய் நிலங்கள்  அனைத்தும் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலங்கள் என்றும்; இந்துசமய அறநிலைய சட்டப்பிரிவு78ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நிலங்களுக்கான குத்தகை  தொகையை தனி நபர்கள் வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு எவரேனும் வசூலித்தால்  சட்டப்படி சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை  மேற்கொள்ளப்படும்;  க.ச., எண் வரிசைப்படி நிலங்கள் குறித்து தகவல்களும்  நோட்டீசில் இடம் பெற்றுள்ளன. கோவில் செயல் அலுவலர் அழகேசன் கூறுகையில், கோவிலுக்கு சொந்தமான  நிலங் கள்  குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில்  பல இடங்களில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன. நிலங்கள் உள்ள பகுதியிலும்; கோவில் அருகேயும் பிளக்ஸ் போர்டுகள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !