பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு அனுக்கை, காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று காலை 10:45 மணிக்கு கோயில் கொடிமரத்தில் நந்தி கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இரவு விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன் முன்செல்ல, பிரியாவிடையுடன் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி அம்பாள் என பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இதே போல் தினமும் சுவாமி, அம்பாள் நந்தி, குண்டோதரன், ராவண கைலாசம், ரிஷப, குதிரை, கிளி, சிம்ம, அன்ன, காமதேனு வாகனங்களில் வீதி வலம் வருவர். ஏப்., 13 காலை கமல வாகனத்தில் தபசு கோலமும், மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். ஏப்., 14 ல் காலை 10:30 மணிக்கு திருக்கல்யாணம், ஏப்., 15 காலை 9:45 மணிக்கு ரதவீதிகளில் சித்திரைத் தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 2:00 மணிக்கு மேல் சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்க உள்ளார். ஏப்., 16 அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.