ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட ஹனுமன் சிலை; பிரதமர்
ஆமதாபாத்: குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் ராமேஸ்வரம் மற்றும் மேற்கு வங்கத்தில் இதேபோன்று பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்படும் எனக் கூறினார். நாட்டின் நான்கு திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி முதல் சிலை ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டது.தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் கடந்த 2018 ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், சிலையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் திறந்து வைத்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இதேபோன்ற மிகப்பெரிய ஹனுமன் சிலையை ஷிம்லாவில் பார்த்துள்ளோம். தற்போது, இரண்டாவது சிலை மோர்பியில் நிறுவப்பட்டுள்ளது. மேலும் இரண்டு சிலைகள் ராமேஸ்வரம் மற்றும் மே.வங்கத்தில் நிறுவப்படும். ஹனுமன் சிலையை உருவாக்குவது தீர்மானம் மட்டும் அல்ல. ஒரே பாரதம் சிறந்த பாரதம் என்பதில் ஒரு அங்கமாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.