சித்திரை திருவிழாவில் 2 பேர் பலியான விவகாரம் : அழகர்கோவிலில் பரிகார பூஜை நடத்த மனு
மதுரை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள், முதியோர் உதவித்தொகை, பட்டா, இலவச வீட்டுமனை கேட்டு மனுக்கள் கொடுக்கப்பட்டன.* மதுரை காமராஜ் பல்கலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளித்தனர். இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், நிதியைக் காரணம் காட்டி தொகுப்பூதிய, தற்காலிக ஊழியர்கள் 136 பேரை நீக்கிவிட்டனர். இவர்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் உள்ளனர் தெரிவித்தார்.* பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் சமூகங்களின் சமூகநீதிக் கூட்டமைப்பு சார்பில், ஒரு சாதிக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் கல்வி நிறுவனங்களில் சேர்ந்தவர்களின் படிப்பு தொடரலாம். ஆனால் பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.* ஆலயப் பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலைமணி மனு: சித்திரைத் திருவிழாவில் இறந்த நபர்களுக்கு ரூ.10 லட்சம், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. காயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டோரை முதல்வர், அமைச்சரோ சந்தித்து ஆறுதல் கூற வேண்டும். அழகர் கோவிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.