உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லை கடற்கரையில் அரிப்பு: பழங்கால கோவில் வெளிப்பட்டதா?

மாமல்லை கடற்கரையில் அரிப்பு: பழங்கால கோவில் வெளிப்பட்டதா?

மாமல்லபுரம், : மாமல்லபுரம் கடற்கரையில் திடீரென அரிப்பு ஏற்பட்டதால், பழங்கால கோவிலின் இடிபாட்டு சிதைவுகள் வெளிப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவர் கால கலைச்சின்னங்கள் உள்ளன. இவற்றை, உள், வெளிநாட்டு பயணியர் சுற்றி பார்க்கின்றனர்.பழங்கால நகராக விளங்கும் மாமல்லபுரத்தில், கடல் நீரோட்ட மாற்றத்திற்கேற்ப, கடல் உள்வாங்கி, மணற்பரப்பு அதிகரிப்பது, பின் மணற்பரப்பு அரிக்கப்பட்டு, கடல் நீர் நிலப் பகுதியில் புகுவது என, இயற்கை நிகழ்வு ஏற்படுகிறது.கடலரிப்பின்போது, அதிகபட்சம் 3 அடி ஆழத்திற்கே மணற்பரப்பு அரிக்கப்படும். சில நாட்களாக கடலரிப்பு ஏற்பட்டு, கூடுதல் ஆழத்தில், மணற்பரப்பு அரிக்கப்பட்டது.இச்சூழலில், கடற்கரை கோவில் அருகில், மகிஷாசுரமர்த்தினி குடவரை ஒட்டிய பகுதியில், கோவில் இடிபாட்டு சிதைவுகள், நேற்று முன்தினம் மாலை வெளிப்பட்டன.பழங்கால கோவிலின் கல் துாண்கள், கோபுர கலசம், மேல்தள தாங்கு கற்கள், சங்ககால வகை செங்கற்கள், மண்பாண்ட சிதறல்கள், களிமண் கலவையாலான சுவர் தோற்றம் என, நிலத்தடியில் புதைந்திருந்து, கடலரிப்பில் வெளியே தெரிகின்றன. இதையறிந்த பொதுமக்கள், திரண்டு சென்று, அவற்றை கண்டு வியந்தனர். இப்பகுதியில் கோவில் இருந்தது, ஆச்சரியமாக உள்ளது. ஆய்வு நடத்தினால், என்ன கோவில் என்பது தெரியலாம் என, பொது மக்கள் கூறினர்.தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த முன்வர வேண்டும் என, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இந்நிலையில், தொல்லியல் துறை சென்னை வட்ட கண்காணிப்பாளர் காளிமுத்து, பழங்கால கோவில் இடிபாட்டு சிதைவுகளை, நேற்று பார்வையிட்டார்.இத்துறை ஊழியர்கள், கடற்கரையில் கிடந்த கல் துாண்கள், செங்கற்கள் ஆகியவற்றை சேகரித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !