பொன்னேரி தேர் திருவிழாவில் பக்தர்கள் பரவசம்
பொன்னேரி : பொன்னேரி கரிகிருஷ்ண பெருமாள் கோவில் தேரோட்ட திருவிழாவில், பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்து சென்றனர்.பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, இம்மாதம் 16ம் தேதி முதல், விமரிசையாக நடந்து வருகிறது.
இரண்டு ஆண்டுகளாக, பிரம்மோற்சவ விழா எளிமையாக நடந்த நிலையில், இந்த ஆண்டு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.நேற்று முன்தினம் நடந்த அரி - அரன் சந்திப்பு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவின் ஏழாம் நாளான நேற்று, காலை 9:15 மணிக்கு தேர் திருவிழா துவங்கியது. காலை 10:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட மரத்தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதயராய் கரிகிருஷ்ண பெருமாள் வீற்றிருந்தார்.
தேரடி தெரு, தாயுமான் தெரு, நீலியப்பாதுரை தெரு, செங்குன்றம் சாலைகளில், பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்துச்சென்றனர்.தேரோட்டத்தின்போது, தன்னார்வலர்கள் ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானம், மோர், உணவுகளை வழங்கினர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், குடும்பத்தினருடன் வந்து சுவாமியை தரிசித்தனர்.காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். மாலை 5:00 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது.