அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம்: மின்வாரிய அதிகாரிகள் அலர்ட்
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில், மின்சாரம் சார்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தப்படுகிறது என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பின், அடுத்த மாதம், 12, 13, 14 தேதிகளில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. கோவில் முகப்பில் உள்ள தேர்நிலையில் துவங்கி, ரத வீதிகள் வழியாக, மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர், களிமேடு கிராமத்தில் உள்ள அப்பர் மடத்தில், அதிகாலை நடைபெற்ற தேர்த்திருவிழாவில், மின்சாரம் தாக்கியதில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, சித்திரை தேரோட்டம் நடத்தப்படும் அனைத்து கோவில்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் என்பது, 22 அடிக்கு 22 அடி என்ற சுற்றளவில், அதன் சக்கரம் முதல், கலசம் வரை, 92 அடி உயரம் கொண்டது. விழாவுக்கு குறுகிய நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர் அலங்காரப்பணிகள் விறுவிறு வென நடந்து வருகின்றன. திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தபடியாக, மாநிலத்தில் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. சித்திரை தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களின் நெரிசலை சமாளிக்கவும், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சம்பந்தப்பட்ட துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அவிநாசி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் விஜய ஈஸ்வரன், கூறியதாவது;
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோடும் வீதிகளில், புதைவட மின் கேபிள் பொருத்தப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், ரத வீதிகளில், அதிகளவு கடைகள், வீடுகள் இருப்பதால், மின் கம்பங்கள் மூலம் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது; அவிநாசி லிங்கேஸ்வர் கோவில் தேரோட்டத்தின் போது, தேர் வீதிகள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மின் இணைப்பு துண்டிக்கப்படும். முன்கூட்டியே இதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.