உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவாரம் திருவாசகத்திலும் பரிபாஷைகள்

தேவாரம் திருவாசகத்திலும் பரிபாஷைகள்


சித்தர்களுடைய பாடல்களில் மட்டுமல்லாமல் தேவாரம், திருவாசகத்திலும் ‘பரிபாஷை’ என்னும் மந்தணச்சொற்கள் அமைந்திருப்பது வியப்பானது. சான்றாக அகரம், எட்டும் இரண்டும் ஆகிய சொற்களைக் காண்போம்.
1. பதியில் நின்ற அட்சரந்தான் அகார மாகும்
 – அகத்தியர் ஞானம்
2. அகாரம் இத்தனையும்  – அகப்பேய்  
   அங்கென் றெழுந்ததடி.
அகப்பேய்ச்சித்தர் பாடல்
அகர நிலை விளங்கு சத்தர் அனைவர்க்கும்
– திருவருட்பா
இவ்வாறு சித்தர்கள் குறிப்பிட்டுள்ள அகரம் என்ற சொல், சைவத்திருமுறைகளில் அமைந்திருப்பதைக் காண்போம்.
1. ஆரும் அறியார் அகாரம் அவனென்று
– திருமந்திரம்
2. அகரமுதலானை அணியாப்பானுாரானை
– சம்பந்தர் தேவாரம்
3. அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய்
– சுந்தரர் தேவாரம்
உலகப்பொது மறையான  திருக்குறளிலும் இச்சொல் அமைந்துள்ளது.
அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு  – திருக்குறள், 1.
இந்த அகரம் என்பது எந்த மொழியின் முதல் எழுத்துமல்ல என்பது உண்மை, உறுதி. இதன் உட்பொருள் ஞானிகள் மட்டுமே தவம் செய்து கண்டதாகும். மற்றவர்கள் கூறும் விளக்கமெல்லாம் எத்தகையது என்றால், வேதங்களில் ஆதிபுருஷன் என்று குறிப்பிடப்படும் பரப்பிரம்மத்தைத் திருவள்ளுவர் ஆதி பகவன் என்று தமிழாக்கம் செய்ததற்கு, ஆதி என்ற பெண்ணுக்கும் பகவன் என்ற ஆணுக்கும் பிறந்தவர் என்று பொருள் கூறப்படுவதற்கு சமமாகும். அகரம் என்பதைப் போன்ற சொற்கள் ஞானிகளின் மறையில் உள்ளவை என்று எழுத்திலக்கணம் வகுத்த தொல்காப்பியர் கூறுகிறார்.
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே
அதே இவண் நுவலாது எழுந்து புறத்திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவன்றிசினே.
– தொல்காப்பியம், எழுத்ததிகாரம்
தொல்காப்பியர் கூறும் அந்தணர் மறை எங்கே உள்ளது என்ற வினாவிற்குத் திருமூலர் எழுதாத புத்தகம் என்று விளக்கம் கூறுகின்றார்.
எழுதாப்புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்திருந்து ஒத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணமுண்ட வாறே. திருமந்திரம்
இதன் பொருளாவது:
ஞான மார்க்கம் பற்றிய எழுதாத புத்தகத்தின் ஏடுகளில் உள்ள பொருளைத் தெருளாத கன்னி போன்ற சீடன் மெய்யான குருவின் அருளின்றி ஒதுவது மலராத பூவின் மணத்தின் மதுவைப்பிறவாத வண்டு உண்பதைப் போன்றதாகும். இதிலிருந்து, ஞான மார்க்கத்தில் தவம் செய்து முத்தி அடைவதைப் பற்றிய ரகசியத்தை ஞான குருவிடம் இருந்து நேரில் தான் அறிய வேண்டும் என்று தெளிவாக  அறியலாம். மற்றொரு மறை பொருள் சொல்லான இதே போன்ற எட்டும் இரண்டும் என்பதை ஆராய்வோம்.
1. எட்டிரண்டும் ஒன்று மது வாலை என்பார்– கருவூரார் பூஜாவிதி
எட்டெழுத்தாய் இரண்டெழுத்தாய் ஏகமாகி – தட்சணாமூர்த்தி ஞானம்
3. எட்டும் இரண்டும் அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே. – இடைக்காட்டுச்சித்தர்
சித்தர் பாடல்களிலுள்ள எட்டும் இரண்டும் என்ற சொற்கள் சைவத் திருமுறைகளில் இவ்வாறு அமைந்திருக்க காண்கிறோம்.
1. எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என் நந்தி.
– திருமந்திரம்
2. எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென்
இட்டம் ஈசன் எனாதவர்க் கில்லையே – அப்பர்
3. பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோ டிரண்டும் அறியேனையே.
– திருவாசகம்
எல்லோரும் படித்துப் பயன் பெறுமாறு  நேரடியாக பாடாமல் இவ்வாறு பரிபாஷைச் சொற்களை வைத்துப்பாட வேண்டிய காரணம் என்ன
இவ்வினாவிற்கு சிவவாக்கியர் என்ற சித்தர் கூறும் விடையை கேளுங்கள்.
யோக சாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்ததிரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.
சிவவாக்கியர்
தான் பெரிய யோகி யெனக் கூறிக்கொண்டு அந்தரத்தில் எழுப்பிக் காட்டுவார். அட்டமாசித்திகளை செய்தும் காட்டுவார். ஆனால் பெண்ணாசை கொண்டு அலைந்து பேய் பிடித்தவர் போல் சாவர்.
2. முத்தி சேரச் சித்தி இங்கு முன்னளிப்பேன் பார்
சத்தியங்கள் சொல்லி எங்கும் சாமி வேடம் பூண்டு
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாயப் பணம் பறித்துப் பாழ்நரகலில் வீழ்வரே.
சிவவாக்கியர்
உடலெங்கும் சாமி வேடம் பூண்டு நீ முத்தியடைந்திட நான் சித்தியளிப்பேன் என்று சத்தியம் செய்து தினமும் வயிறு வளர்க்க நீதி, நியாயம் பேசி மக்களிடம் பணம் பறிப்போர் பாழ்நரகில் வீழ்ந்தனர்.
இத்தகைய பொய்யர்களிடம் மக்கள் ஏமாறாமல் காப்பதற்கு என்றே பரிபாஷையில் பாடினார்கள் என்பது குரு வாக்காகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !