உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கிரிவீதி, சன்னதி வீதியில் ஆக்ரமிப்பு: பக்தர்கள் அவதி

பழநி கிரிவீதி, சன்னதி வீதியில் ஆக்ரமிப்பு: பக்தர்கள் அவதி

பழநி: பழநி மலைக்கோயில் கிரி வீதி, சன்னதி வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் சிரமமடைகின்றனர்.

பழநி மலைக்கோயிலுக்கு வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிகின்றனர். இந்நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, சாலையோர, தரைவிரிப்பு, இருசக்கர வாகன கடைகள், மலைக்கோயில் அடிவாரம் கிரிவீதி, சன்னதிவீதிகளில் ஆக்கிரமித்துள்ளன. பாத விநாயகர் கோயிலில் இருந்து, குடமுழுக்குமண்டப வாயில் வரை தேவஸ்தானம் சார்பில் வெயிலின் தாக்கம் குறைய தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வசதியாக அப்பகுதியில் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அவ்வழியே செல்லும்போது அவர்களை இடைமறித்து பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.

சன்னதி வீதி, கிரி வீதியின் நடுவில் இருசக்கர வாகன, கையில் தட்டு, பொருள் வைத்து விற்கும் வியாபாரிகள், தரையில் அமர்ந்து டாட்டூ வரையும் நபர்கள், பேன்சி,அல்வா, துணி,பூஜை பொருட்கள், பொம்மைகள், சிற்றுண்டி கைகள் ஏராளமான அமைத்துள்ளனர். மேலும் நிரந்தர கடைகளுக்கு முன் ஆக்கிரமிப்பு செய்வதால் கடைக்காரர்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே கடைக்காரர்கள் சிலர், ஆக்கிரமிப்பாளர்கள் கடைமுன் ஆக்கிரமிக்க வரும்முன் அப்பகுதியில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் சன்னதி வீதி சுருங்கி உள்ளது. கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். ஓரிரு நாளில் அக்னி நட்சத்திரம் துவங்க உள்ள நிலையில் உள்ளூர் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவர். அவர்களுக்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருக்கும்.

மேலும் கிரி வீதிகளில் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, குதிரைவண்டி உள்ளிட்ட வாகனங்கள் வருவதால் மேலும் இடையூறு ஏற்படுகிறது. வின்ச் ஸ்டேஷன், ரோப் கார் ஸ்டேஷன் பகுதிகளில் கிரிவீதியில் வெளியூர் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இடையூறு ஏற்படுகிறது. நீதிமன்ற ஆணை இருந்தபோதிலும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை. ஆக்கிரமிப்புகளால், வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற கிரி வீதி, சன்னதி வீதிகளில் பக்தர்கள் இடையூறு இல்லாமல் சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !