உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாமளாபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா

சாமளாபுரத்தில் ராமானுஜர் ஜெயந்தி விழா

பல்லடம்: சாமளாபுரத்தில், ராமானுஜர் ஜெயந்தி விழா, மற்றும் 1005வது ஆண்டு அவதார தினவிழா நடந்தது.

ராமானுஜரின், 1005வது ஆண்டு அவதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லடம் அடுத்த, சாமளாபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா, மற்றும் அவதார தின விழா, மற்றும், 6ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா உள்ளிட்டவை கொண்டாடப்பட்டது. நேற்று காலை, 9.00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, சுதர்சன ஹோமம், திருமஞ்சனம் உள்ளிட்டவை நடந்தன. அலங்கரிக்கப்பட்ட ராமானுஜர் திருவுருவப் படத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து, கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலமாக எடுத்து வரப்பட்டு, பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், ஸ்ரீபூமி நீளா சமேதராக வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 7.00 மணி முதல் ராமானுஜர் நூற்றந்தாதி, திவ்யா பிரபந்த சேவை, லட்சார்ச்சனை, மற்றும் பஜனை உள்ளிட்டவை நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !