நெடுமானூர் கோயில் திருவிழா பிரச்சினை: தாசில்தார் சுமூக தீர்வு
உளுந்தூர்பேட்டை: நெடுமானூர் கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினர் பிரச்சினை தாசில்தார் தலைமையிலான சமரச கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை தாலுகா நெடுமானுர் கிராம ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா வரும்15ம் தேதி துவங்குகிறது. இத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தற்போது 8 நாட்கள் பாரதம் படித்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நடக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கூறினர். அதற்கு மற்றொரு தரப்பினர் வழக்கம் போல் 3 நாட்கள் மட்டுமே திருவிழா நடத்த வேண்டும் என கூறினர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதால், உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று மாலை தாலுகா அலுவலகத்தில் சமரசக் கூட்டம் நடந்தது. அப்போது தாலுகா அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில முக்கியஸ்தர்களை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 3 நாட்கள் திருவிழா நடத்துவது எனவும், 8 நாட்களுக்கு பதிலாக 4 நாட்கள் பாரதம் படித்தல் நிகழ்ச்சியுடன் விழா நடத்த வேண்டும் என கூறி இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.