கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
தஞ்சாவூர்: கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் மார்ச் 2ம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்,கும்பகோணத்தில் 12 சிவன் கோவில்கள் மற்றும் 5 பெரு மாள் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடை பெறும். கும்பகோணத்தில் உள்ள மகாமக குளக்கரையில் மாசிமக தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடப்பது வழக் கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி திருவிழா வருகிற மார்ச் 2ம் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று (21 ம் தேதி) கும்பகோணத்தில் சிவன் கோவில்களில் மாசி மக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி காசிவிஸ்வநாதர் கோவில், ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 கோவில்களில், சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பிறகு, சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன்னால் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு எண்ணெய், பன்னீர், பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 2ம் தேதி அனைத்து கோவில்களில் இருந்தும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவாக புறப்பட்டு மகாமக குளத்தின் கரையில் எழுந்தருகிறார்கள். அதனை தொடர்ந்து மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகாமக குளத்தில் மகா ஆரத்தி வைபவம் நடக்கிறது. சிவன் கோவிலை தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) வைணவ கோவில்களில் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களை சாமி புறப்பாடு நடக்கிறது. 25ம் தேதி பஞ்ச மூர்த்திகள் ஓலை சப்பரத்தில் மூஷிக வாகனம், மயூர வாகனம், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலாவும், 27ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. 28ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடக்கிறது. அதன் பின்னர் நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், கோடீஸ்வரர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோவில்களில் ஏக தின உற்சவமும் நடக்கிறது.