வேலங்குடி கருப்பர் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடி கருப்பர் கோயிலில் நடந்த மாசித் திருவிழாவில் நேர்த்திக்கடன் நிறைவேற்ற கிராமத்தினர் திரளாக பங்கேற்றனர்.
வேலங்குடியில் சிவராத்திரியை முன்னிட்டு அங்காளம்மன் மற்றும் உறங்காப்புளிக் கருப்பர் சாம்பிராணி வாசகர் கோயில் மாசித் திருவிழா பிப்.12ல் காப்புக்கட்டி துவங்கியது. தொடர்ந்து குல தெய்வமாக வழிபடும் பக்தர்கள் விரதமிருந்து அர்ச்சனை செய்து சுவாமி வழிபாடு செய்யத் துவங்கினர். மறுநாள் சாமி அரிவாளில் ஆடி கப்பறை நடைபெற்றது. பிப்.15ல் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் நடந்த முதல் நாள் திருவிழாவில் அங்காளம்மன் கோயில் உற்ஸவ அம்மன் பச்சைவாழைக் குடிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரண்டாம் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் சாம்பிராணி போட்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பச்சைவாழை பரப்பியும், கரும்புத் தொட்டில் கட்டியும், அரிவாள் சமர்ப்பித்தும் நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். கருப்பரின் குதிரை வாகனத்திற்கு மலர் மாலைகள் அணிவித்தனர். பரவலாக அன்னதானங்கள் நடத்தப்பட்டது. இன்று மூன்றாம் நாள் திருவிழா நடைபெறுகிறது. நாளை மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது.