உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சூர் பூரம் விழா கோலாகலம் : யானை அணிவகுப்புடன் வண்ண குடை மாற்றம்

திருச்சூர் பூரம் விழா கோலாகலம் : யானை அணிவகுப்புடன் வண்ண குடை மாற்றம்

பாலக்காடு: கேரளாவில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா 30 யானைகள் அணிவகுத்து நின்று வண்ண குடை மாற்றம்" நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இதை பல்லாயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் பார்த்தனர்.

கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில், இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். கொரோனா தொற்று நோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் வெறும் சடங்காக மட்டுமாக நடத்திய இப்பெருவிழா நடப்பாண்டு நேற்று முன்தினம் துவங்கியது. இவ்விழாவில் 70க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் கலந்து கொண்டன. நெய்தலைக்காவு பகவதி அம்மனின் உருவச் சிலையை ஏந்திய எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை நேற்று முன்தினம் காலை வடக்கு நாதர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் நின்று தும்பிக்கையை உயர்த்தி 36 மணி நேரம் நீண்டு நிற்க்கும் விழாவை துவக்கி வைத்தது. விழாவில் நேற்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. காலை 7.30 மணிக்கு கணிமங்கலம் சாஸ்தா கோவில் மூலவர் எழுந்தருளி ஓன்பது யானைகளின் அணிவகுப்புடன் தெற்கு கோபுர நடைய வழியாக நுழைந்து வடக்கும் நாதரை வணங்கி மேற்கு கோபுரம் வழியாக வெளியில் வந்தார்.

இதேபோல், எட்டு உப தேவதேவதை கோவில் மூலவர்களும் யானைகளில் வந்து வடக்கு நாதரை வணங்கி சென்றனர். இதன் பின் காலை 11 மணியளவில் பிரஹ்மஸ்வம் மடத்தில் இருந்து வடக்குநாதர் சன்னிதிக்கு வரும் "மடத்தில் வரவு" என அழைக்கப்படும் யானைகளின் அணிவகுப்பும் தொடர்ந்து பிரபல மேள கலைஞர் கோங்காடு மதுவின் தலைமையில் பஞ்சவாதியம் நடைபெற்றது. தொடர்ந்து பாரமேக்காவு பகவதி அம்மன் பஞ்சவாத்தியம் முழங்க 15 யானைகளின் அணிவகுப்புடன் எழுந்தருளி வடக்கும் நாதன் சன்னதிக்கு வரும் வைபவம் நடந்தன. இதன்பின், "இலஞ்சித்தறைமேளம்" என அழைக்கப்படும் செண்டைமேளம் இசைக்கப்பட்டன. பிரபல செண்டை மேள வித்வான் பெருவனம் குட்டன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணிநேரத்திற்கு இடைவிடாமல் நடந்த இந்த "இசை மழை" நிகழ்ச்சியை அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தியது. மாலை 4.30 மணியளவில் திருவம்பாடி கோவிலுக்கு சொந்தமான 15 யானைகள் ராஜா அலங்காரத்துடன் வடக்குநாதர் கோவில் முன் வந்து நின்றன. அப்போது வடக்கு நாதர் கோவில் தெற்கு கோபுர நடைவழியாக பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் வெளியே வந்து சக்தன் தம்புரான் மன்னரே வலம் வந்து வடக்கு நாதர் கோவில் தெற்கு கோபுர வாயிலை பார்த்து நின்றன.

இதையடுத்து மாலை 5.30க்கு 30 கோவில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக்குடையை மாற்றினர். இருதரப்பினர் போட்டிபோட்டு நடத்திய இந்த "குடைமாற்றம்" நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் திரண்டிருந்த வெளிநாட்டிலிருந்து உட்பட வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இன்று அதிகாலை விழாவின் சிறப்பு அம்சமான பிரமாண்ட வானவேடிக்கை நடைபெற்றன. இன்று காலை 9 மணிக்கு திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகள் துதிக்கையை உயர்த்தி வடக்கு நாதர் கோவிலில் வணங்கி உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடைபெறும். பூரம் விழாவையொட்டி ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !